மீள் பதிவு-2

2012ல் உலக அழியப் போகிறதாம். இதற்கு ஆதாரமாக ஊடகங்கள் குறிப்பிடுவது் மாயா இனத்தவரின் காலண்டரைத் தான். உலகம் அழியப் போகிறதா? அது எப்போது? எப்படி என்பதில் நமக்கு அக்கறையில்லை. ஏனெனில் சர்வ வல்லமை மிக்கோன் படைத்த இவ்வுலகை பற்றி அவன் ஒருவனே அறிந்த ரகசியம் அது. நாம் அதற்குள் செல்ல விரும்பவில்லை. யார் இந்த மாயா இன சமூகம்? அவர்களுக்கும் உலக அழிவுக்கும் என்ன சம்பந்தம்? இது தான் நம் முன் நிற்கும் கேள்வி. மாயா இன மக்களைப் பற்றிய வியப்பூட்டும் சில அதிச்சியளிக்கும் தகவல்களை நண்பர் ராஜ்சிவா என்பவர் உயிரோசை இணைய இதழில் விளக்கமாக எழுதி்யுள்ள கட்டுரையை இங்கு தொடர்களாக உங்களுக்குத் தருகிறேன். இதில் அவரிடம் இருந்து எடுத்து உங்களுக்குப் பரிமாறும் வேலை மட்டுமே என்னுடையது. இவ்விசயத்தில் உனக்கு நம்பிக்கை இருக்கிறதா? இல்லையா என்று கேட்காதீர்கள். இந்த விவாதத்திற்குள் நான் வர மாட்டேன். இக் கட்டுரையில் உள்ள அதிர்ச்சியளிக்கும் வியப்பூட்டும் சில தகவல்களை மட்டும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இதை இங்குப் பதிவு செய்கிறேன். இதோ தொடர்-2 தொடர்கிறது…..
Er..சுல்தான்

‘2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும்’ (2)

ராஜ்சிவா

முற்குறிப்பு: நான் எழுதப் போகும் மாயா பற்றிய இந்தத் தொடர் பற்றி, உங்களுக்குக் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். வேறுபட்ட அபிப்பிராயங்கள் இருக்கலாம். அவற்றை எல்லாம், எடுத்த எடுப்பிலேயே மறுக்க வேண்டும் என்று தயவுசெய்து உடன் மறுக்க வேண்டாம். இந்தத் தொடரை நான் முடிக்கும் வரை பொறுத்திருங்கள். பலருக்கு இது பகுத்தறிவுக்கு ஒத்துவராத, அறிவியல் ஒத்துக் கொள்ளாத சம்பவங்களாக இருக்கும். உண்மைதான். நானும் உங்களைப் போன்ற அறிவியலை நம்பும் ஒருவன்தான். எனவே முடிவு வரை பொறுத்துக் கொண்டு, இதை வாசியுங்கள்.

கடந்த தொடரில், சுவடே இல்லாமல் ஒரு இனம் எப்படி அழிந்திருக்கலாம் என மாயாக்கள் வாழ்ந்த இடங்களை ஆராயச் சென்ற ஆராய்ச்சியாளர்களுக்குக் கிடைத்தது ஒரு மாபெரும் அதிர்ச்சி. மாயாக்கள் விட்டுச் சென்ற கல்வெட்டுகளை ஆராய்ந்த அவர்களை பிரமிப்பின் உச்சிக்கே கொண்டு சென்றது அது.

சரி, அப்படி என்னதான் நடந்தது? அங்கு என்னதான் இருந்தது? என்ற கேள்வியுடன் கடந்த பதிவில் விடைபெற்றோம் அல்லவா..?

அதை உங்களுக்கு விளக்குவதற்கு முன்னர், வேறு ஒரு தளத்தில் நடந்த, வேறு ஒரு சம்பவத்துடன் இன்றைய தொடரை ஆரம்பிக்கிறேன். இப்போது சொல்லப் போகும் இந்தச் சம்பவத்துக்கும், மாயாவுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஆனாலும் வேறு வகையில் சம்பந்தம் உண்டு.

இராஜராஜ சோழன் என்னும் மாபெரும் தமிழ் மன்னனை யாரும் மறந்திருக்க மாட்டோம். தமிழ்நாட்டில் கி.பி. 985ம் ஆண்டு முதல் கி.பி. 1012 ஆண்டு வரை தஞ்சையை தலைநகராகக் கொண்டு அரசாண்டு வந்த சோழ மன்னன்தான் இராஜராஜன்.

இன்றும் உலகம் தமிழனைத் திரும்பிப் பார்க்கும் வண்ணம், அவன் உலக அதிசயங்களுக்கு நிகரான ஒரு அழியாச் சின்னத்தைக் கட்டினான். அதுதான் தஞ்சையில் அமைந்துள்ள, ‘தஞ்சைப் பெரிய கோவில்’ என்றழைக்கப்படும் பிரமாண்டமான கோவில்.

அதன் மிகப் பிரமாண்டமான இராஜகோபுரம் மிகவும் அழகான கலை நயத்துடன் கட்டப்பட்டது. அதில் யாருமே எதிர்பார்க்காத விசேசம் ஒன்று இருந்ததுதான் இங்கு நான் ராஜராஜ சோழனை இழுப்பதற்குக் காரணம்.

ஆம்! அந்தக் கோபுரத்தில் காணப்பட்ட ஒரு உருவச் சிலை எல்லாரையும் புருவத்தை உயர்த்த வைத்தது. ஒரு இந்துக் கோவில் கோபுரத்தில் இது சாத்தியமா? என்னும் கேள்விகள் ஒலிக்கும் வகையில் இருந்தது அந்த உருவச் சிலை. கோபுரங்களில் இந்துக்களின் நாகரீகங்களையும், கலைகளையும், தெய்வங்களையும் சிலைகளாக வடிப்பதுதான் நாம் இதுவரை பார்த்தது.

ஆனால் இது……..! அப்படி அந்தக் கோபுரத்தில் இருந்த உருவச் சிலை என்ன தெரியுமா….?

ஒரு மேலைத் தேச நாட்டவன், தலையில் தொப்பியுடன் காணப்படுகிறான். தஞ்சை மன்னனுக்கும் இந்துக்களின் ஆச்சாரத்துக்கும் ஏற்பே இல்லாத் தன்மையுடன் அந்தச் சிலை பெரிதாகக் காட்சியளிக்கிறது.

அந்தப் படம் இதுதான்……..!

“முழங்காலுக்கும் மொட்டைதலைக்கும் முடிச்சுப் போடுவது போல” என்று சொல்வார்களே, அது போல இந்த மேலைத்தேச மனிதனின் சிலை, பாரம்பரியமிக்க இந்துக்களின் கோபுரத்தில் அமைந்திருக்கிறது என்றால், அதற்கென ஒரு காரணம் நிச்சயமாக இருந்தே தீருமல்லவா…?

இராஜராஜ சோழனின் காலத்தில் யவனர்களாக வந்து, எமது கோவிலிலேயே உருவமாக அமைவதற்கு, அந்த மேற்குலகத்தவனுக்கு வரலாற்றில் பதிவாகாத வலுவான காரணம் ஒன்று இருந்திருக்கும் அல்லவா…?

ஆனால், அதை ஆராய்வதல்ல இப்போது எங்கள் வேலை.

சம்பந்தமே இல்லாத இடத்தில், சம்பந்தமே இல்லாதவர்கள் தொடர்புபட்டிருப்பார்கள் என்பதற்கு எம்முள்ளேயே இருக்கும் சாட்சிதான் இது. இந்தச் சம்பவம் போலத்தான் மாயா சமூகத்தை ஆராய்ந்த ஆய்வாளர்களுக்கும் சம்பந்தமே இல்லாத வடிவங்களில் ஆச்சரியம் காத்திருந்தது.

அந்த ஆச்சரியமும் முடிச்சுப் போட முடியாத மூச்சை அடைக்கும் ஆச்சரியம்தான். தஞ்சையில் யவனன் இருந்தது ஒன்றும் பெரிய விசயம் இல்லை. ஆனால் மாயா இனத்தில் இருந்தவை திகைக்க வைத்தது.

அவை என்ன தெரியுமா……..?

மாயாக்களின் கல்வெட்டுகளை ஆராய்ந்தபோது அங்கு கிடைத்த சித்திரங்களிலும், சிலைகளிலும் வித விதமாக அயல்கிரக வாசிகளின் உருவங்கள்தான் காணப்பட்டன.

அட….! இதுவரை இந்த மனிதன் நல்லாத்தான் பேசிக் கொண்டிருந்தார். இப்ப என்ன ஆச்சு இவருக்கு என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. ஆனால் அது உண்மை என்பதுதான் மறுக்க முடியாத உண்மையாகவும் இருந்தது.

என்ன இது புதுக்கதையாக இருக்கிறதே என்பீர்கள்.

உண்மைதான். புதுக்கதைதான். புதுக்கதை மட்டும் அல்ல, புதிர்க்கதையும் கூட. எனவே அவை பற்றி நிறைய எழுத வேண்டும். அதனால் முதலில் முன்னோட்டமாக மாயாக்களிடம் கண்டெடுத்த ஒரு படத்தைப் போடுகிறேன் நீங்களே பாருங்கள்.

ஏதாவது தெரிகிறதா? அல்லது புரிகிறதா…?

நவீன யுகத்தினர் விண்ணுக்கு அனுப்பிய ராக்கெட்டின் வடிவை ஒத்ததும், அந்த ராக்கெட்டை இயக்கும் ஒரு மனிதன் சாய்ந்த நிலையில் அமர்ந்திருக்கும் அமைப்பிலும் ஒரு சித்திரம் கண்டெடுக்கப்பட்டது. அது சதுர வடிவிலான கல்லில் செதுக்கப்பட்டிருக்கிறது. ஒரு மனிதன் சாதாரணமாக அப்படி அமர்ந்திருக்க எந்த ஒரு தேவையும் இல்லாத விதத்தில் அமைந்த சித்திரம் அது.

மாயன் வாழ்ந்த இடங்களில் அமைந்த பிரமிடுகளுக்கள் ஒன்றில் அமைந்திருந்த சுரங்கத்தில் அவர்களின் அரசன் ஒருவன் புதைக்கப்படிருக்கிறான். அந்த அரசனின் உடலை வைத்து மூடிய இடத்தில் இந்தச் சித்திரம் கண்டெடுக்கப்பட்டது. இந்தச் சித்திரத்தில் இருப்பது மாயன்களின் அரசனாக இருப்பதற்கும் சான்றுகள் உண்டு என்றாலும், அந்தச் சித்திரம் ஏன் அப்படி வரையப்பட்டிருக்கிறது என்பது மிகப் பெரிய கேள்வியாக எழுந்துள்ளது.

சரி, இது தற்செயலாக நடந்த ஒன்றாக இருக்கலாம் அல்லது இந்தச் சித்திரம் வேறு எதையோ குறிக்கலாம் என்று ஒதுங்கப் போனவர்களுக்கு, அவற்றுடன் கிடைத்த வேறு பல பொருட்கள் சந்தேகங்களை மேலும் வலுவடையச் செய்தது.

அப்படி என்னதான் கிடைத்தன..?

அதை அடுத்த தொடரில் பார்க்கலாம்……!

தகவல் :ராஜ்சிவாஉயிரோசை இணைய இதழ்.

Engr.Sulthan
__._,_.___

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: