இந்தியா உலகின் குப்பைத்தொட்டி ! 2

அதிரை-நிருபர்-குழு | ஞாயிறு, ஆகஸ்ட் 12, 2012 | இந்தியா , குப்பை தொட்டி , புதுசுரபி , ரஃபீக்

இந்தியாவின் வலிமையினை உலகுக்கு பறைசாற்றும் தொழிநுட்ப புரட்சியின் வித்தாய் திகழ்வது மின்னணுவியல். தகவல்-தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு, மருத்துவம் என இதன் எல்லையில்லா பங்களிப்பு தொடர்வது கொண்டிருக்கும் வேளையில் நம்நாடு மட்டுமன்றி மேலைநாடுகளில் பயன்படுத்தப்பட்டு உபயோகமற்ற எலக்ட்ரானிக் கழிவுகளுக்கு புதைகுழியாய் நம்நாட்டின் நகரங்கள் மாறிவருகிறது.

மின்னல் வேகத்தில் வளரும் இந்திய பொருளாதரத்தில், ஒவ்வொரு ஆண்டும் 5 ,00 ,000 டன் எடை கொண்ட மின்னணு குப்பைகளும் சேர்ந்தே வளர்கின்றது. இது 2012 ல் ஒரு மில்லியன் டன் அளவுக்கு வளரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

நம்நாட்டில் பயன்படுத்தப்பட்டு இன்று உபயோகமற்ற நிலையில் இருக்கும் கம்ப்யூடர் பாகங்களும், செல்போன்களும், மருத்துவ உபகரணங்களும் என ஒரு புறம் இருந்தாலும், 1992 ம் ஆண்டு உலக வல்லரசுகளை சமாதானம் செய்வதற்காக தற்கொலைக்கு சமமான ‘காட்’ ஒப்பந்தத்தைத் தொடர்ந்து அதன் உட்கூறாய் நம் மீது திணிக்கப்பட்ட ‘ஓபன் ஜெனரல் ரைட்ஸ்’ எனும் விதிதியின் கீழ், மேலை நாடுகளில் சேரும் கழிவுகள் ‘கொடை’ என்ற பெயரிலும், மறுசுழற்சி என்ற போர்வையிலும் நம் மீது திணிக்கப்படுகிறது.

நம்நாட்டைப் பொறுத்தவரை இருபது ஆண்டுகளுக்கு முன்பு கம்ப்யூடர் என்பது எட்டாக் கனியாகவே இருந்தது. அந்த சமயத்தில் கம்ப்யூட்டரும் அதன் உதிரி பாகங்களும் மற்ற எலக்ட்ரானிக் பொருட்களும் அந்த முறையில் நம்நாட்டிற்கு தருவிக்கப்பட்டது. ஆனால் அந்த சட்டம் இன்று வளர்ந்த நாடுகளின் குப்பைகளை கொண்டு வந்து இந்தியாவில் கொட்டும் அரசாங்க ஆணையாக செயல்படுகிறது.

கடந்த 2006 ம் ஆண்டு முதல் 2009 ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் மட்டும் மேலைநாடுகளிலிருந்து தானமாக(!) வழங்கப்பட்ட கழிவுப் பொருட்கள் 190 மடங்கு அதிகரித்துள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சகம் அலறுகிறது.

இந்தியாவிற்கான ஒட்டுமொத்த இறக்குமதியில் 48 % மேலை நாடுகளின் குப்பை கழிவுகள்.

பேரழிவுகளைத் தரக்கூடிய கழிவுகளை இந்தியாவில் இறக்குமதி செய்யப்படுவதற்கு ஆட்சேபம் தேவிக்கும் சட்டம், உரிமை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் இருந்தாலும் மேற்சொன்ன ‘ஓபன் ஜெனெரல் ரைட்ஸ்’ என்ற விதி எந்த பாகுபாடும் இல்லாமல் எல்லாக் கழிவுகளையுமே இந்தியாவில் இறக்குமதி செய்ய நங்க்கூரமிடுத்கிறது.

ஆபத்தின் ஆழமறியா நம்மூர் அப்பாவி குடிசைவாசிகள் அதுபோன்ற குப்பைகளை தரம் பிரித்து காசு பார்க்க அலைமோதுகின்றனர், குடிசைத் தொழிலதிபர் ஆவதற்காக.

மேற்கு தில்லியின் மாயாபுரி பகுதியில் தீபக் ஜெயின் என்ற பழைய இரும்புக்கழிவு வியாபாரி உட்பட ஆறு தொழிலாளர்கள் மயங்கி சரிந்து விழுந்து உயிருக்கு போராடத் துவங்கியவுடன் அள்ளிக் கொண்டுபோய் அப்போல்லா மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். அவசரப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர்களில் இருவருக்கு கை, கால் மற்றும் உடல்பகுதியில் உள்ள முடிகள் உதிரத் தொடங்கி, மெழுகுபோல் அவர்கள் கை, கால்கள் உருகத்தொடங்கியதைக் கண்ட மருத்துவக்குழு செய்வதறியாது திகைத்து நின்றது. நோயாளிகளின் பின்புலங்களை ஆராய்ந்தபோது, அவர்களுடைய இருப்பிடம்,குடோன் ஆகியவற்றை பரிசோதிக்குமாறு அகில இந்திய மருத்துவக்கழகம் பணித்தது. மாநகராட்சி, மாநகர காவல்துறை, அணுசக்தி ஒழுங்குமுறைக்கழகம் என பலரும் களத்தில் இறங்கினர்.

ஆய்வின் முடிவில் “முறுக்கேற்றப்பட்ட இரும்புக்கம்பி பின்னல்கள்” என்ற பெயரில் எட்டு மூட்டைகளை பாதிக்கப்பட்ட ஜெயின் குடோனிலிருந்து கைப்பற்றியது அணுசக்தி ஒழுங்குமுறைக்கழகம்.பரிசோதனைக்கு பிறகு பகீர் தகவலையும் வெளியிட்டது. காமாக் கதிர்களை வெளியிடும் கோபால்ட் – 60 என்ற உயிர்க்கொல்லும் கதிரியக்கப் பொருள்தான் இந்த மோசமான விளைவுக்குக் காரணம் என்று ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியினை நடத்திவிட்டு தன் கையைக் கழுவிக்கொன்டது அணுசக்தி ஒழுங்குமுறைக் கழகம். ஆனால் “இது பாதுகாப்பனதோ அல்லது பாதுகாப்பற்றதோ என்பதைப் பற்றி எல்லாம் எங்களுக்கு கவலை இல்லை” என்கிறார்கள் கம்ப்யூடர் கேபிள்களை உருக்கி அதிலிருந்து தாமிரக் கம்பியினைப் பெறும் வேலையினைச் செய்யும் பெண் தொழிலாளர்கள்.

தாமிரம் பெறுவதற்காக நச்சுப்புகையில் கருகும் இவர்களை கேன்சர் நோய் மட்டுமல்லாது குழந்தைப் பேறின்மை, சிறுநீரகங்கள் செயலிழப்பு, நரம்புகளின் செயலிழப்பு போன்ற பெருநோய்களும் தாக்கலாம். தாமிரம் எடுத்துக்கொண்டபின் எஞ்சியுள்ள பாதரசக் கலவை மற்றும் ஈயம் போன்றவற்றினை ஆறுகளிலும், விளைநிலங்களிலும் வீசி விடுகின்றனர் உணவு தானியங்கள் மூலம் மற்றவர்களுக்கும் அப்பெரும் வியாதிகள் பரவும் என்பதினை அறியா அப்பாவிகள்.

கிராமப்புறத்தில் வாழ்பவர்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பெறும் சவாலாய் நிற்கும் இப்பிரச்சனைக்கு சட்ட வல்லுனர்கள் முன்னின்று இந்தியப் பெருநாட்டின் மக்களின் வாழ்வில் நஞ்சைக் கலக்கும் இந்த அதிநவீன தொழில்நுட்ப குப்பைகளை முறையாக, சுற்றுச்சூழலுக்கும், மனித மற்றும் மற்ற உயிரினங்களுக்கும், விவசாயப் பெருந்தொழிலுக்கும் பாதிப்பு ஏற்படாதவாறு அழித்திட வகைசெய்யும் ஆலைகளை அமைத்தல் வேண்டும். மேலை நாடுகளிலிருந்து ‘கொடை’ அல்லது ‘மறுஉபயோகம்’ எனும் பெயரில் நம் மீது குப்பை கொட்டுவதை தடைசெய்யப்பட வேண்டும். கோபால்ட்-60 விவகாரம் மக்களவையில் விவாதிக்கப்பட்டு விவாதப்பொருளாகவே அறியப்பட்டது போலில்லாமல், மக்களின் வாழ்க்கையையும், உயிர் உடைமைகளையும், உலக வெப்பமயமாதல் என்ற நெருங்கிவரும் அச்சுறுத்தலையும் கவனத்தில் கொண்டு புதிய சட்டங்கள் வகுப்பதன் மூலமே இப்பேராபத்திலிருந்து நம்மைக் காத்துக்கொள்ளமுடியும்.

புதுசுரபி

ALAVUDEEN

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: