வீட்டுக்குள் தகவல் தொழில்நுட்பம்!

“”சார் புதுசா ஒரு ஐ-பேட் வாங்குனோம். எப்படி ஆபரேட் பண்ணுறதுன்னு நானும் என் ஒய்ஃப்பும் முழிச்சிக்கிட்டிருந்தப்ப, டென்த் படிக்கிற எங்க பையன் அசால்ட்டா ஆபரேட் பண்ணிட்டான் சார். கம்ப்யூட்டரில் பூந்து விளையாடுறான். பார்ட் பார்ட்டா கழட்டி, அசெம்பிள் பண்ணிடுறான். செவன்த் படிக்கிற எங்க பொண்ணும் ஃபேஸ்புக்கு, இ-மெயிலுன்னு கலக்கிக்கிட்டிருக்கா சார்”
-தங்கள் பிள்ளைகளின் தகவல் தொழில் நுட்பத் திறமை பற்றி இப்படிச் சொன்ன எக்ஸ்போர்ட் கம்பெனி பிராஞ்ச் மேனேஜர் கார்த்திகேயன் போன்றவர்களுக்கு இந்த திறமையின் பின்னே அறிவுடன் ஆபத்தும் கலந்திருக்கிறது என்பது ரொம்பவும் லேட்டாகத்தான் தெரிய வருகிறது.
சீட் வாங்குவதே குதிரைக்கொம்பு என்று சொல்லக்கூடிய சென்னை யின் பிரபல மூன்றெழுத்துப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மாணவி ஒருத்தியும் இப்படித்தான் தகவல் -தொழில்நுட்பத்தில் எக்ஸ்பர்ட் என்று பெயரெடுத்திருந்தாள். சுறுசுறு துறுதுறு மாணவியான அவள் சில நாட்களாக ரொம்பவும் டல்லடிப்பதைப் பார்த்து, டாக்டரிடம் கூட்டிச் சென்றார்கள். செக்கப் செய்த லேடி டாக்டரிடமிருந்து வெளிப்பட்ட ரிசல்ட் அதிர்ச்சியடைய வைத்தது. காரணம், அந்த மாணவி கருவுற்றிருந்தாள்.
எந்தெந்த திறமைகளுக்காக அவளைப் பெற்றோரும் ஆசிரியைகளும் பாராட்டினார்களோ, அதே விஷ யங்களுக்காக அவளைக் கண்டபடி திட்ட ஆரம்பித்தார்கள். அவளுடைய இ-மெயில் இன்பாக்ஸிலும், ஃபேஸ் புக் மெசேஜ் பாக்ஸிலும் குவிந்திருந்த பாய் ஃப்ரென்ட்ஸின் ரொமான்ட்டிக் சாட்டிங்குகளும், செல்போனில் வந்த எஸ்.எம்.எஸ்.களும், இந்தத் தகவல் -தொழில்நுட்பம்தான் அவள் சம்பந்தப்பட்ட அதிர்ச்சி ரிசல்ட்டுக்குக் காரணம் என்பது தெரியவந்தது.
சென்னை உள்ளிட்ட இந்தியாவின் மெட்ரோபாலிட்டன் சிட்டிகளில் இன்ஃபர்மேஷன் டெக்னா லஜியின் வளர்ச்சி எந்தளவுக்கு குழந்தைகள்-மாணவர்கள்-இளைஞர்களின் அறிவைப் பெருக்குகிறதோ, அதே அளவுக்கு சற்றும் குறைவில்லாமல் அழிவுப்பாதைக்கும் திசை திருப்புகிறது என்பதை சமூக ஆர்வலர்களும் கல்வியாளர்களும் ஒப்புக்கொள்கிறார் கள்.
அறிவியலின் அதிவேக வளர்ச்சி- உலகமயமாக்கல் கோட்பாடு-புதிய பொருளாதாரக் கொள்கை- நுகர்வுக் கலாச்சாரம் இவையெல்லாம் நம் வீட்டுக்குள் தகவல்-தொழில்நுட்ப சாதனங்களைக் கொண்டு வந்து குவித்து வைக்கின்றன. இந்தியாவில் 55% மக்கள் கழிப்பிட வசதியில்லாமல் இருக்கிறார்கள். ஆனால், 65%க்கும் அதிகமான மக்களிடம் செல்போன் இருக்கிறது. இது அண்மையில் கிடைத்த புள்ளி விவரம். செல்போனைத் தாண்டி, கம்ப்யூட்டர், லேப்டாப், இன்டர்நெட், ஐ-பேட் என்று புதுசு புதுசாக தகவல்-தொழில் நுட்ப சாதனங்கள் தாராளப் புழக்கத்தில் உள்ளன. வீட்டில் உள்ள பெரியவர்களைவிட இளைஞர்களும் மாணவர்களும் குழந்தைகளுமே இவற்றை அதிகமாகக் கையாள்கிறார்கள். அரசாங்கமே மாணவர்களுக்கு லேப்டாப்பை விலையில்லாமல் வழங்கி வரும் காலம் இது.
“”நான் படிக்கும்போதெல்லாம் ஸ்கூலில் ஏதாவது அசைன்மென்ட் கொடுத்தால் எங்கப்பாவையும் அண்ணனையும் ஹெல்ப் பண்ணச் சொல்லி தொந்தரவு செய்வேன். இப்ப என் பிள்ளைகள் அவங்களே இன்டர்நெட் மூலமா எல்லாத்தையும் டவுன்லோட் பண்ணிடுறாங்க. ப்ராட்பேண்டுக்கு ஒழுங்கா பில் கட்டுறது மட்டும்தான் என்னோட வேலை. என்னைவிட என் பிள்ளைகள் அறிவாளிகளாக இருக்கிறார்கள்” என்கிறார் இரண்டு குழந்தைகளின் தந்தையான முரளி.
குழந்தைகள் உரிமை அமைப்பின் செயல்பாட்டாளரான தேவநேயன் நம்மிடம் விரிவாகப் பேசினார். “”தகவல்-தொழில் நுட்ப வசதிகளை எந்தெந்த வயதில் எந்தெந்த அளவுக்குப் பயன்படுத்துவது என்ற விழிப்புணர்வும் கண்காணிப்பும் மிகவும் அவசியம். இவையிரண்டும் இல்லாவிட்டால் பாதிப்புகள் அதிகமாகிவிடும். அதிலும், நுகர்வுவெறியோடு இருக்கும் நடுத்தரக் குடும்பங்களில் இதன் பாதிப்பு மிக அதிகமாக இருக்கும். ஒரு குழந்தை, இரு குழந்தை உள்ள வீடுகளில், பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவதே பெற்றோரின் கடமை என்ற மனநிலை இருப்பதால், ஐ-பேட் உள்பட எல்லாவற்றையும் வாங்கிக் கொடுத்துவிடுகிறார்கள். இதுபோன்ற கருவிகளுடன் தான் குழந்தைகள் அதிக நேரத்தைச் செலவழிக்கின்றன. போதாக்குறைக்கு, டி.வி. சேனல்களின் நிகழ்ச்சிகளும் நேரத்தை ஆக்கிரமித்துக்கொள்கின்றன. வீட்டில் குழந்தைகளும் பெற்றோரும் ஒன்றாகச் செலவிடும் நேரம் மிகவும் குறைவாக இருக்கிறது.
இதன் காரணமாக, குழந்தைகளின் மனநிலையில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. உடல்ரீதியான தவறிழைத்தல் களுக்கும் வழிவகுக்கின்றன. பழக்கவழக்கங்கள் பேச்சு வார்த்தைகள் இவை மோசமானதாக மாறுகின்றன. “பெரிய பருப்பா’ என்ற வார்த்தை சர்வசாதாரணமாக குழந்தைகளின் வாயிலிருந்து வெளிப்படுகிறது. அதுபோல இளம்பெண்கள் பலரும் “டுபுக்கு’ என்கிறார்கள். இந்தச் சொற்கள் எதைக் குறிக் கின்றன என்பதைக்கூட அவர்கள் அறிந்திருப்பதில்லை. பிள்ளைகள் கேட்பதையெல்லாம் வாங்கித்தருவது என்பதற்குப் பதில், “இது உனக்கு இப்போது தேவையில்லை. இது வேண்டாம்’ என்று சொல்லி அதை அவர்கள் ஏற்றுக்கொள்ளும் மனநிலையை உருவாக்குவதே பெற்றோர்களின் கடமையாக இருக்கவேண்டும். அதற்கு, குழந்தைகளுடன் பெற்றோர் செலவிடும் நேரம் அதிகரிக்கவேண்டும்.

பள்ளியிலும் அணுகுமுறைகள் மாறவேண்டும். ஊடகங் களை முறைப் படுத்தும் செயல் பாடுகள் வர வேண்டும். -அப் போதுதான் தகவல்-தொழில் நுட்ப ஆபத்து களிலிருந்து இளைய சமு தாயத்தை மீட்டு, அறிவுப்பாதைக்குத் திருப்ப முடியும்” என்றார் தேவநேயன்.
இப்போதெல்லாம் பள்ளியில் முதல் வகுப்பிலிருந்தே கம்ப்யூட்டரைக் கை யாளக் கற்றுக்கொடுக்கிறோம் என்று சொல்லும் ஆசிரியை ஜெயந்தி நிர்மலா, “”கம்ப்யூட்டரின் அடிப்படைச் செயல் பாடுகள், அதில் பெயிண்டிங் செய்வது, டிராயிங் முறைகள் பற்றியெல்லாம் சொல்லித் தரப்படுகிறது. உயர் வகுப்புகளில் கம்ப்யூட்டர் லேங்வேஜ்கள் கற்றுத் தரப்படு கின்றன.
செயல்வழிக் கற்றல் முறை வளர்ந்து வருவதால், மாணவ-மாணவிகளே தங்க ளுக்குத் தேவையானதைத் தேடிப்பிடித்து படிக்கும் பழக்கம் வளர்ந்து வருகிறது. அதனால் இன்டர்நெட்டை எப்படிப் பயன்படுத்துவது, கூகுளில் எப்படி சர்ச் செய்வது என்பதையெல்லாம் சொல்லித் தர வேண்டியுள்ளது. இதன் மூலமாக, அவர்கள் தங்களின் பாடம் சம்பந்தமான தகவல்களையும் படங்களையும் தேடிப் பெறமுடி கிறது” என்கிறார்.
மாணவர்களின் இந்தத் தேடலும் ஆர்வமும், அதன் எல்லைகளைக் கடக்கும்போதுதான் திசைமாற்றம் ஏற்படுகிறது. 18 வயதுக்கு மேற் பட்டவர்கள்தான் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் உறுப்பின ராக முடியும். ஆனால், பள்ளி மாணவ-மாணவிகள் தங்களின் ஃபாய் ஃப்ரெண்ட்ஸ், கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் தேடலுக்காக பிறந்த தேதியை மாற்றிப் பதிவு செய்து உறுப்பினர்களாகிவிடுகிறார்கள்.
சாட்டிங் வசதிகள் மூலமாக டேட்டிங், ஃப்ரீசெக்ஸ் பற்றியெல்லாம் பேசத்தொடங்கி, பின்னர் நேரில் அறிமுகமாகி, தீம்பார்க்-ஷாப்பிங் மால்-ரிசார்ட்ஸ் எனத் தனிமை நாடி செல்கின்ற அளவுக்கு நிலைமை முற்றிவிடுகிறது. இந்தப் போக்கு சென்னை போன்ற நகரங்களில் அதிகரித்து வருவதால் தகவல்-தொழில் நுட்ப வளர்ச்சி என்பது வரமா, சாபமா என்ற கேள்வி எழுகிறது.
“”வளர்ச்சியை நாம் தடுக்க முடியாது. இத்தகைய சாதனங்கள் நம் வீட்டு வரவேற்பறையைத் தாண்டி, படுக்கையறை வரைக்கும் வந்துவிட்டன. அவற்றை நம் பிள்ளைகள் எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பொறுத்துதான் இது வரமா, சாபமா என்று சொல்ல முடியும் என்கிற இல்லத்தரசியும் சுற்றுச்சூழல் இலக்கிய ஆய்வாளருமான சித்ராபாலசுப்ரமணியன், “”பொறுப் புணர்ச்சியுடன் கூடிய சுதந்திரத்தை நம் பிள்ளைகளுக்கு அளித்து, அதற்கேற்றபடி அவர்களைப் பழக்கினால் இத்தகையத் தொழில்நுட்பங்களினால் ஏற்படும் பாதிப்புகளைக் கட்டுப்படுத்தலாம். ஆனால், பெற்றோர்கள் பலரும் இதனை எப்படிக் கையாள்வது என்பது தெரியாமல் திரிசங்கு நிலையில் இருந்தால், பிள்ளைகளைக் கண்காணிக்க முடியாது.
நான் வளர்ந்த காலத்திற்கும் இன்று என் பிள்ளைகள் வளர்கிற காலத்திற்கும் நிறைய மாற்றங்கள் இருக்கின்றன. சகமாணவர்களுடன் பேசுவதும் பழகுவதும் இன்று இயல்பானதாகிவிட்டது.
இப்படிப்பட்ட நிலையில், நாம்தான் நம் பிள்ளை களுக்கு நல்லது எது, கெட்டது எது என்பதைச் சொல்லித்தரவேண்டும்.
கவுன்சிலிங் என்பது குழந்தைகளுக்கு மட்டுமல்ல, பெற்றோருக்கும் தேவைப்படுகிறது. நம் பிள்ளைகளுடன் நாம் எந்தளவுக்கு நேரத்தைச் செலவிடுகிறோம், அவர்களின் செயல்பாடுகளில் அக்கறை செலுத்துகிறோம் என்பதைப் பொறுத்தே இதுபோன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள முடியும். அறிவியல் வளர்ச்சியை நல்லமுறையில் பிள்ளைகள் பயன்படுத்தச் செய்யும் பொறுப்பு பெற்றோருக்குரியது” என்கிறார் அழுத்தமாக.
ஒரே வீட்டில் உட்கார்ந்துகொண்டு “சாப்பிட வருகிறீர்களா’ என்று மனைவி எஸ்.எம்.எஸ். அனுப்புவதும், அதற்கு கணவனும் பிள்ளைகளும் பதில் எஸ்.எம்.எஸ் அனுப்புவதும் வளர்ந்துகொண்டிருந்தால் தகவல்- தொழில்நுட்ப வளர்ச்சி என்பது தறிகெட்ட நிலைமை யைத்தான் உருவாக்கும். “அளவுக்கு மிஞ்சினால்’ என்ற பழமொழி, இந்தத் தகவல்தொழில்நுட்பக் காலத்திலும் அர்த்தமுடையதாகவே இருக்கிறது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: